4 Sept 2010

கையெழுத்து......




இப்படித்தான்;
எப்போதும் இப்படித்தான்....
ஒரு மருந்துச்சீட்டில்
டாக்டரின் கை எழுத்தைபோல்
..........
கடைசிவரை;
புரியாமலே இருக்கிறது..........
வாழ்வின் பக்கங்கள் !!!!

25 Aug 2010

பயணம் .........






உன்னிடம்;
போய் வருவதாய் சொல்லி
விடைபெற்றேன்;

மீளவும் திரும்பல்
நிச்சயமில்லை;

எடுத்த தண்ணீர்...
வாய்க்குழியை
எட்டும் முன்னும்....

சமைத்த உணவை
உண்பதற்கு முன்னாலும்.....

எழுதிய பரீட்சை முடிவுகள்
வருவதற்கு முன்னும்....

வாங்கிய புதுச்சட்டை
உடுத்தும் முன்னும்..

ஏன்
தெருவை கடக்கும் முன்னும்..
என - எதிர்பாராமலே
அமைந்துவிடுகிறது.....
மரணம் என்கிற
இறுதிப்பயணம்.....

21 Aug 2010

'பஸ்'லயா வந்த????






பஸ்சில் ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் .....
'வாவ் ' அல்லை தொல்லை இல்லாமல் ஹாயாக பயணம் போகலாம்...
இல்லன்டா ...;
அந்தப்பயணம் போல ஒரு எரிச்சல் பிடித்த பயணம் ஒண்டும் இல்ல......
அங்காலையும் இடி....
இங்காலையும் இடி....
முதுகுதண்டுக்குள்ளாள வியர்வை
வெள்ளமாய் ஓடும்.....
அல்லாஹ் ,
'' முன்னால போ...''.கண்டக்டர் கத்துவான்.....
முன்னால போவன்......
''பின்னால போ.....''மாறி நிண்டு கத்துவான்....
பின்னால போவன்....
இறங்குமட்டும் இந்தக் கூத்துதான்......
முன்னுக்குபோற ....
பின்னுக்குவார....
முன்னுக்குபோற ....
பின்னுக்குவார....
வேலைக்கி போகண்டு பூசின பவுடர் அந்த பொடிச்சிற முகத்தால வேருவையா வடியிது.....
என்ட 'பெயார் அன் லவ்லி' பிசின் மாதிரி ஒட்டுது.....
இந்த பஸ் ...
அங்க நிக்கிது
இங்க நிக்கிது ....;
வியர்வ நாத்தம் குடலை பிக்கிது....

இளவட்டங்கள் கூடிநிண்டு
சிரிச்சி கூத்தடிக்குது....
அவள் எப்படி ?
''அவளோட பேசினாயா..
என்னோட சிரிச்சாண்டி...''
என்ன பேசறம் எண்டு இல்லாம எண்ணமெல்லாம் பேசுது.....
எங்களுக்கும் காது இருக்கு பாத்து..!!

அடேய் டிரைவர் ,கெதியில எட்றா பஸ்ஸ ...........

19 Aug 2010

விசேஷங்கள்....








சிலரோடு மனம் திறந்து பேசமுடிகிறது....
நெருக்கமானவர்களான போதும் சிலரோடு எதையும் பேச முடிவதில்லை........
ஆள் அரவமில்லா கடற்கரை மணல் மீது அமர்ந்து....
ஹோ...வென்று கத்தவேண்டும் போல ஒரு வலி ;
மனசைக் குடைந்துகொண்டே இருக்கிறது....

ஒரு சின்ன வார்த்தையில் .....
மனசு சுக்கு நூறாய் உடையும்
துயரம் தெரியாமல்
சிலர் பேசிவிடுகிறார்கள்.....

ஒரு தூசியைப்போல.....
எதையும் சுலபமாய்
தட்டிவிட்டு நடக்கும் தைரியம் எனக்குள் இருந்தது....

என்ன ஸ்பெஷல் ?
ஸ்பெஷல் எதுவும் இல்லையா?
என்று படிக்கிற காலங்களில் என்னைக் குடைந்த ஒரு கூட்டம்
தெரிந்தோ தெரியாமலோ என்னை சுற்றி இருந்தது.....

''என்ன மகளுக்கு ஒண்டும் பாக்கலியா?
என்ன இப்படியே வச்சிருக்கிற ஐடியாவோ ?''
என்னமோ அவர்கள் தான் என்னை தலையில் சுமப்பதைபோல அவர்களின் விசாரணைகள்....
தெரிந்தவர்கள் எல்லாம்
உம்மாவையும் வாப்பாவையும் வார்த்தைகளால்
நசுக்கிய காலம்.....

படிப்பு முடிந்த கையோடு....
வீட்டிலிருக்கும் நிம்மதியை அந்த விசாரணைகள்
தொலைத்தன....

திருமணப் பேச்சுக்கள் முடிந்திருந்தது.....
இரு வீட்டிலும் தனிப்பட்ட காரணங்களுக்காக
இரண்டு வருடங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டி ஆகிற்று.....

''என்ன எப்ப திருமணம் ?
எப்ப விசேஷம்?
என்ன ஒரு ஸ்பெஷல்லும் காணல்ல?''

வேலைக்குப்போன இடத்தில் ஒரே காதுகுடைச்சல்..

''இப்படி பிந்தினா எப்படி....
வேற இடத்த பாக்கலாமே?''

வலிய வந்து அவர்கள் தந்த அட்வைஸ்....
நாங்கள் என்ன இவர்களைக் கேட்டமா ?

ஒரு வார்த்தை !!
ஒரு ஆறுதல் வார்த்தை தான் அப்போதைக்கு தேவையாக இருந்தது...
அது யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை .......................

நண்பிகளின்
உறவுக்காரர்களின் திருமணங்களுக்கு
தலைகாட்ட முடியாது...........
எல்லோரின் விசாரணையும் அது ஒன்றாகத்தான் இருந்தது...

ஏன் என்று எனக்கு தெரியவில்லை ????????????
திருமணம் மட்டுமே வாழ்கை என்று
முட்டாள் தனமாய் எல்லோரும் சிந்திக்கிறார்கள் ,

திருமணம் நடந்தது ..............
விசேஷக்காரர்களின்
விசாரிப்புகளுக்கெல்லாம்
பதில் சொன்ன இறுமாப்போடு நான் இருந்தேன்....

அவர்களின் வாயை அடைத்து விட்ட
சந்தோஷத்தில் நானிருந்தேன்.....
அடுத்த விசேஷம் பற்றி
அதிகம் அலட்டாமல்
..............................................
...........................................
..............................................
ஒரு மாதம் ஓடித்தொலைந்த போது
அடுத்த அடி.................
மிகப்பெரிய அடி......

மறுபடியும்;
''என்ன ஒரு ஸ்பெஷல்லும் காணல்ல?''
''என்ன ஒரு ஸ்பெஷல்லும் காணல்ல?''
''என்ன ஒரு ஸ்பெஷல்லும் காணல்ல?''

நான் உடைந்து ஊத்துண்டு தான் போனேன்....

எண்ணி பத்தே மாசத்தில் குழந்தையோடு இருக்க வேண்டும் என்பது....
எலோரினதும் எதிர்பார்பாக இருந்தது.....

ஒருவருடத்திற்கு மேலாகியும்
அந்த விசேஷத்தை அறிவித்து
வாயடைக்க முடியாமல்
நான் .....................

காணும் இடமெல்லாம்
இதே விசாரணை....
''இப்ப வேணாஎண்டு இருக்காகலாக்கும்....
பிந்தினா நல்லமில்ல ..........
என்ன இப்படியே இரிக்கிற ஐடியாவோ?''

மறுபடியும் அதே பல்லவி....
நண்பிகளின்;
உறவுக்காரர்களின்;
பிறந்த குழந்தைகளை பார்க்க விரும்புவதில்லை நான்

எல்லோரின் விசாரிப்பும் அது ஒன்றுதான்
அவர்கள் கேலியாகப் பேசும் வார்த்தைகள்
மனசை கிழித்து விடுவதை அறியாமலே;
பேசிக்கொண்டிருக்கிறார்கள்.....

இவர்களின் விசாரிப்புக்கு என்னிடம்
எந்தப்பதிலும் இல்லை
அழுவதைததவிர .

ஆழ்ந்த கவலையோடு என்னிடத்தில்
துருவித்துருவி விசாரணை நடத்துகிறார்கள்.....
............................
எனக்குள் இருக்கிற துயரங்களையும்
வலிகளையும் வாசிக்கமுடியாமல்....


நான் தனித்திருக்கவே பிரியப்படுகிறேன்.....
''ஸ்பெஷல் எதுவும் இல்லையா?''
''ஸ்பெஷல் எதுவும் இல்லையா?''
''ஸ்பெஷல் எதுவும் இல்லையா?''
''ஸ்பெஷல் எதுவும் இல்லையா?''என எனக்குப் பிடிக்காத இந்த வார்த்தை ஒலிக்காத தேசத்தில்.....





'''.............இறைவனின் நாட்ட மின்றி மரத்திலிருந்து ஒரு இலை கூட உதிர்வதில்லை...........................'''
நான் இறைவனை நம்புகிறேன்....!!!!

3 Aug 2010

ஹலோ















ஹலோ ............!!!


பதினோராவது முறையாகவும் கட்டிலில் கிடந்து சக்கரம் கிறுகி எழுந்துவிட்டேன்....
அவரிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை..............
''போனை'' பார்க்கப்பார்க்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது...
''மிஸ் கால் '' களுக்கு பதிலில்லை
எப்போவும் அவர் இப்படி நடந்துகொள்வதில்லை............
வேலை முடிந்த கையோடு போனை தூக்கினால் ,வீடு வந்து சேரும் வரையான ஒரு மணித்தியாலங்களுக்கும் பேசுவார்...........
பேசுவார்....பேசிக்கொண்டே இருப்பார் .............
கல்யாணம் நிச்சயமான புதிதில் துவங்கிய பேச்சு..
''மிஸ் கால்'' பண்ணி மறு நிமிஷம் கால் வரும்,
திருமணமாகி ஒன்றேகால் வருடங்களுக்குப்பினாலும் அப்படி இருப்பதில் எனக்கு ஏகப்பட்ட சந்தோசம்.....

இன்றைக்கு என்னவாகிவிட்டது....???
மனசு கிடந்து மல்லுக்கட்டியது....
போனை நானாக எண்ணி வாழ்வதாய் புலம்புவாரே .....
போன் மட்டும் இல்லை என்றால் ''வெளிநாடும் வேண்டாம் ..வேலையும் வேண்டாம்'' என்று...தூக்கி வீசிவிட்டு வந்துவிடுவாரே ...........

எந்த வேலையிலும் மனசு நிக்கவில்லை ....
துவைக்கப் போட்ட உடுப்பு ....
திருத்த வேண்டிய பரீட்சை பேப்பர் .............
நாளைக்குப் படிப்பிப்பதர்கான பாட ஆயத்தங்கள்
ஆயிரத்தெட்டு வேலைகள் கிடக்கு...
எதிலும் தலையை நுழைக்க முடியல்லையே....

கறி சரியில்லையாம் என உம்மாவோடு வாக்குவாதப்பட்ட தம்பியை வாங்கு வாங்கென்று வாங்கினேன்
யாரோடும் பேசப்பிடிக்கவில்லை
எல்லோரிலும் எரிச்சல் எரிச்சலாக வருது...






















மறுபடியும் மறுபடியும் ''மிஸ் கால்''
ஒரு எஸ்.எம்.எஸ்
அதில் ஏகப்பட்ட உருகல்
'' டேய்,என்னடா பண்ணுறாய்
என்ன ஏதாவது கோவமா?
நேத்து ஏதாவது தப்பா பேசிட்டனா ?
ப்ளீஸ் கால் பண்ணுடா..?

என்னை அறியாமல் ....
கோவத்துக்கு மத்தியிலும் இவ்ளவு வழிதல்

நான் மட்டும்தான் இப்படியா?
என் மனோநிலையில் இருக்கும் மற்றவர்களுக்கும் இப்படி இருக்குமா?

'போனை' ' சுவிச் ஓப்' பண்ணி கட்டில் மூலையில் எறிந்தேன்
...............................................................................
மனசு கேக்காமல் மறுபடியும்
எடுத்து, அறியாமல் உறங்கிப்போனேன்
தூங்கி எழுந்த பிறகும் கண்கள் போனையே தேடி ஏமாந்து போயிற்று

வரட்டும் .....செல்லம்...செல்லக் குட்டி ...என்று உருகட்டும்
எதற்கும் சாய்வதில்லை

சனியன் பிடித்த ''போன்'' அடித்து அடித்துக்கிடக்கட்டும்....

பன்னிரண்டு மனித்தியாலங்களுக்குப்பிறகு
போன் அலறியது
அடித்துப்பிடித்துக்கொண்டு ஓடுகிறேன்

அவருடைய நம்பர் இல்லை ................
பேசப்பிடிக்கவில்லை
அப்படியே நகர்ந்துவிடுகிறேன்............

என்னடி அவசரத்துக்கு கால் பண்ணினா தூக்கமாட்டியே....
என்று என் சிநேகிதிகளில் யாரேனும் புலம்பப்போகிரார்கள்

அதற்கடுத்தாற்போல் அவரிடமிருந்து 'கால்'
ஹலோ ......
ம்ம்...
''என்னடா...??? ''
நான் பேசல்ல..........
''என்ன குட்டிம்மா கோவமா? ''
இதுக்கும் பேசல்ல
'சாரிடா'
............................
...............................
''தொண்ணுத்தொன்பது மிஸ் கால்
ஒரு எஸ்.எம்.எஸ்
சாரி டா குட்டி............ ''

''வேல இருந்து வரக்குள்ள போன்ல சார்ஜ் இல்லடா...
வீட்ட வந்து சார்ஜ்ல போட்டுட்டு தூங்கிட்டண்டா ,
சரியான அலுப்பு ....வேலையில ''சைலன்ட்ல '' போட்டன் ,
பிறகு மாத்தல்லடா................அத

அவர்முடிக்கவில்லை.................
நான் உடைந்து அழுதேன்....
''இப்படியெல்லாம் இருக்காதீங்க
என்னால ஏலா..........என்னமோ ஏதோ எண்டு மனசு பதரினது எனக்கு மட்டும்தான் தெரியும்
நான் விம்மத்துவங்கினேன் ...

இப்போது என்னிடம் பிடிவாதம் இல்லை
அவர் மேல் கோபம் இல்லை
மெது மெதுவாக நான் கரைந்துகொண்டிருந்தேன் ...............

31 Jul 2010

நிக்காஹ்...!!!


















பிடித்த சிநேகிதி வரவில்லை என்பதற்காக,
கல்விச்சுற்றுலாக்களை தவிர்த்துவிடுகிறேன்....
ஒருநாள் பயணத்துக்கு இத்தனை யோசனை...
வாழ்கை நெடுகிலுமாய் நமக்கே நமக்காய் வரப்போகிற ஒருத்தர் என்னோடு
எல்லாவிசயங்களிலும் உடன்படுவாரா?
அடிக்கடி கோபப்படுவாரா?
எடுத்தெறிந்து பேசிவிடுவாரா?
எவ்வளவோ விசாரணைகள் ..............???
முடிவு செய்வதற்கான முக்கிய தருணம்....
சிலருக்கு முடிவுகள் சரிவந்துவிடுகிறது......
சரியென ஏற்றுக்கொண்ட முடிவுகள்
காலப்போக்கில் சிலருக்கு பிழைத்துவிடுகிறது....
எதிபார்ப்புகளுக்கு அப்பால்
இறைவனின் திட்டமிடல் இருப்பது...
எல்லோருக்கும் மறந்துவிடுகிறது...............!!!!